27 September 2012

உஸ்தாத் ஹோட்டல்

மிகப்பெரிதாக சிலாகிக்கப்பட்ட ‘தட்டத்து மராயத்தில்’ , ‘ஓர்டினரி’ படங்கள் ஏமாற்றம் தந்ததால் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாமல்தான் படம் பார்க்கத்துவங்கினேன் - ஆனால்..நெடுநாட்களாகி விட்டது இப்படியொரு மலையாளப் படம் பார்த்து

‘ராஜ மாணிக்கம்’ போன்ற மெகாஹிட் படம் தந்த இயக்குனர் அன்வர் ரஷீதிடம் மிகத் திறமையான இயக்குனர் ஒளிந்திருப்பதை ‘கேரள கஃபே’யில் அவர் இயக்கிய ‘ப்ரிட்ஜ்’ என்ற குறும்படம் மூலம் அறிந்ததுதான் என்றாலும் ஒருமுழுநீளப் படத்தில் அன்வர் பிரகாசிப்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிறுவயதிலேயே தாயை இழந்த சிறுவன் ஃபைசல் தனது நான்கு சகோதரிகளால் வளர்க்கப்படுகிறான் பெண்களோடு வளர்ந்ததால் சமையலில் அதீதமான ஈடுபாடும் ஆர்வமும் இயல்பாகவே வந்து விடுகிறது அவனுக்கு. முன்பொருகாலத்தில் சமையலாளாக இருந்த அவனது தகப்பனாருக்கோ ஃபைசியை தனது மிகப்பெரும் வணிக அரசாங்கத்தின் ராஜாவாக்கிப் பார்க்க ஆசை. கோழிக்கோடு நகரத்தில் 5 நட்சத்திர விடுதி கட்டை அதனை மகன் நிர்வகிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார் தந்தை. மகனுக்கோ எப்படியாவது சிறந்த சமையல்காரனாக ஆசை. தந்தையிடம் ஹோட்டல் மானேஜ்மெண்ட் படிக்கப் போவதாகச் சொல்லி ஸ்விட்சர்லாந்து சென்று படித்து முடித்து ஒரு வெள்ளைக்காரியின் காதலையும் லண்டனில் ஒரு பெரும் ஹோட்டலில் வேலையையும் சம்பாதித்து இந்தியாவுக்குத் திரும்பி வரும் ஃபைசிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. விமான நிலையத்திலிருந்து நேரடியாகப் ஸஹினாவைப் பெண் பார்க்கும் படலம். பெண்ணோடு தனியாகப் பேசுகையில், தனக்கிருக்கும் ஆசைகளைச் சொல்கிறாள் ஸஹினா. திருமணத்துக்குப் பின்னரும் தான் தொடர்ந்தும் வேலை செய்ய விரும்புவதாகவும் அதற்குத் தடையேதும் இருக்கக் கூடாதென்றும் தேவைப்பட்டால் திருமணத்திற்குப் பரிசாகக் கிடைக்கப் போகும் 5 நட்சத்திர விடுதியின் \இன்டீரியர் டிசைனை\யும் தானே செய்ய விரும்புவதாகவும் சொல்ல,  தான் ஹோட்டல் மானேஹ்மெண்ட் படிக்கவில்லை என்பதைசெஃப் என்பதை வெளிப்படுத்த அதிர்ச்சியடைந்த தந்தை மகனின் பாஸ்போர்ட்டையும் கிரெடிட் கார்டுகளையும் பிடிங்கிக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறி கடற்கரையில் சிறிய ஹோட்டல் நடத்தும் தனது தாத்தாவிடம் அடைக்கலமாகிறான். அங்கே சாப்பாடு ஹோட்டலின் அடிப்ப்டைகளையும் வாழ்க்கையையும் அவன் கற்றுக் கொள்வதையும் காதலை அடையாளம் காண்பதையும் செல்லுலாய்டில் சித்திரமாக்கியிருக்கிறார் அன்வர்.

படத்தின் கதையை எழுதியிருப்பவர் அஞ்சலி. ஒரு பெண் என்ப்தாலோ என்னவோ படம் முழுக்க ஒரு நிறைவுத்தன்மை இருக்கிறது. சமையலில் சேர்க்கப்படும் பதார்த்தங்களின் இயல்பைப் போல மசாலாவை அளவோடு கலந்திருப்பதோடு சிறிய அழகான வசனங்களின் மூலம் சுவையை ஏற்றியிருக்கிறார். வண்டி ஓரிடத்தில் நின்று விட லிஃப்ட் கேட்கிறான் ஃபைசி. அவன் கைகாட்டி வாகனங்கள் நிறுத்தாமல் போவதால் ஸஹினா கைகாட்ட வண்டி நிறுத்தப்படுகிறது. “பெண்களுக்கு எல்லாம் எளிது’ என்கிறான் ஃபைஸி. பர்தா அணிந்து ஃபைசி வேன் டிரைவருக்கு அருகில் அமர ஃபைசிக்கு அருகில் அமர்கிறாள் ஸஹினா. வழக்கம்போல வேன் ஓட்டுனர் ஃபைசியை பெண் என நினைத்து தனது கையை வைத்து சில்மிஷத்தைத் தொடர கடுப்பாகி ஸ்ஹினாவிடம் என்ன இது என்கிறான் மெல்லிய குரலில். ‘நீதானே பெண்களுக்கு எல்லாமே எளிதுன்னு சொன்னே’ என்கிறாள் அவள். இதுபோன்ற சின்னச் சின்ன விசயங்களில் கூட அஞ்சலி மேனன் நகைச்சுவை கல்ந்து செய்தி சொல்லியிருக்கிறார்

படம் அடிப்படையில் பேரன் ஃபைசிக்கும் தாத்தா கரீம்க்காவுக்குமான பந்தம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அதனூடாகப் பல்வேறு வாழ்க்கைச் சித்திரங்களை அலசுகிறது. தாத்தா தரும் சுலைமானி (பாலில்லாத தேநீர்)யை அருந்தி விட்டு ‘இதுல என்னமோ சேர்த்திருக்கே. என்ன இது?’ என்கிறான் பேரன். ‘மொஹப்பத் (அன்பு)’ என்கிறார் தாத்தா. படம் முழுக்க மொஹப்பத்  விரவிக் கிடக்கிறது. இந்தக் காட்சியை ஒரு கவிதையைப் போல உருவாக்கியிருக்கும் நேர்த்திக்காகவே அன்வருக்கு ஒரு தனி சபாஷ் சொல்ல வேண்டும்.

‘யார் வேண்டுமானாலும் சமைச்சு வயிற்றை நிரப்பலாம். ஆனா மனசை நிரப்புறதுதான் உண்மையான கைப்புண்ணியம்’ என்று பேரனுக்குப் பாடமெடுக்கிறார் கரீம்க்கா. ‘சமைப்பது எப்படி என்று நான் கற்றுக் கொடுத்து விட்டேன். எத்ற்காகச் சமைக்கணும் என்று கற்றுக் கொள்வதற்காக உன்னிடம் அனுப்புகிறேன்’ என்று கடிதமெழுதி மதுரைக்கு பேரனை அனுப்பி வைக்கிறார். அங்கே அவன்காணூம் காட்சிகளூம் அனுபவமும் வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தை அவனுக்கு உணர்த்துவதாக அமைகிறது - நமக்கும்

என்ன சொல்வது?
படம் முழுக்க நம்மை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. எங்கோ நடப்பது போலில்லாமல் நமக்குப் பரிச்சயமான விசயங்களாக எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது இனம் புரியாத ஓர் மகிழ்ச்சி உணர்வைப் படம் முழுக்க கண்டுகொள்ள முடிகிறது

செகண்ட் ஷோ மூலமாக அறிமுகமான மம்மூக்காவின் மகன் துல்கார் சல்மானின் நடிப்பில் அசாத்தியமான தன்னம்பிக்கை மிளிர்கிறது. சந்தேகமேயில்லாமல் திலகன் படத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார். அந்தச் சிரிப்பு அந்த உடல்மொழி அந்த வசன உச்சரிப்பு.. மரணப் படுக்கையில் கிடக்கும் இந்த மனிதன் எழுந்து வரமாட்டானா என ஏக்கம் நிறைகிறது மனதுக்குள்.. கட்டுப்பாடுகள் நிறைந்த இசுலாமிய குடும்பத்தில் பிறந்து கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஜீன்ஸ் அணிந்து பாப் பாடகியாகவும் வலம் வரும் பாத்திரத்தில் நித்யா மேனன் அசத்துகிறார். அவரது கண்களும் உதடுகளும் கிடைக்கும் நேரத்திலெல்லாம் கொல்கிறது மனதை

லோகநாதனின் நேர்த்தியான ஒளிப்பதிவு, கோபி சுந்தரின் நெகிழ்ச்சியான இசை, தேர்ந்தெடுத்த நடிகர்களின் உழைப்பு, மெலிதான நகைச்சுவை கலந்த வசனங்கள், மிக நேர்த்தியான கலை இயக்கம் என்று ஒரு நல்ல சினிமாவுக்குத் தேவையான முழுமையான கலவை உஸ்தாத் ஹோட்டலில் இருக்கிறது. ஆங்காங்கே வெடிச் சிரிப்பை வரவழைக்கும் அதே நேரம் சில தருணங்கள் நெகிழ்ச்சியால் கண்களைப் பனியவும் வைக்கிறதென்பதில் இயக்குனர் அன்வர் மற்றும் அஞ்சலியின் உழைப்பு தெரிகிறது. மனம் முழுக்க நிறைவு தரும் ஓர் அனுபவமாக உஸ்தாத் ஹோட்டல் இருக்கிறது. நல்ல மலையாளப் படங்களை விரும்புகிறவர்கள் தவற விடக் கூடாத படம்

10 comments:

Karthik Ero said...

Welcome back annachi :-)

// மரணப் படுக்கையில் கிடக்கும் இந்த மனிதன் எழுந்து வரமாட்டானா என ஏக்கம் நிறைகிறது மனதுக்குள் //

:-(

Riyas said...

பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த படம் உங்களின் விமர்சனம் அவசரமாக பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலைத்தருகிறது!

அகநாழிகை said...

வாசல் தெளிக்கின்ற நீர் படபடவென்றில்லாமல் நிதானமாக எல்லாத் திசையிலும் சீராகப் பரவி நிலம் நனைப்பது போல திரைப்படத்தின் பல்வேறு பக்கங்களையும் பற்றி சொல்லியிருக்கின்ற நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி. இணைய திரைப்பட விமர்சனங்களை நினைவு படுத்தாத இனிய விமர்சனமாக இருந்தது.

• பொன்.வாசுதேவன் •
அகநாழிகை

முரளிகண்ணன் said...

Welcome Back Annaachi

வவ்வால் said...

ஆசிப்ஜி,

நீண்ட நாட்களாச்சு ,உங்களைப்பதிவில் பார்த்து, நலமா?

மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்!

உங்க சிஷ்யர் மோகந்தாசரும் காணோம்?

nellai அண்ணாச்சி said...
This comment has been removed by the author.
nellai அண்ணாச்சி said...

நீண்ட நாட்களாச்சு ,உங்களைப்பதிவில் பார்த்து, நலமா?

Mohandoss Ilangovan said...

//ஒரு பெண் என்ப்தாலோ என்னவோ படம் முழுக்க ஒரு நிறைவுத்தன்மை இருக்கிறது.//

ஆசிப் பதிவை யாரோ ஹாக் செய்துவிட்டார்கள்.

Jackiesekar said...

பார்த்துடுவோம்....

Anonymous said...

you should have menthioned about jeyaprakash' role.Inspired from a real Tamilan Narayan Krishnan http://www.akshayatrust.org/

LinkWithin

Blog Widget by LinkWithin